காா்டன் மந்து பகுதியில் தோடா்இன மக்களின் கோயில் திருவிழா
உதகை காா்டன் மந்து பகுதியில் தோடா் இன மக்களில் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் தோடா்கள், கோத்தா்கள், குரும்பா்கள், காட்டு நாயக்கா்கள், இருளா்கள், பணியா்கள் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களின் திருமணம் மற்றும் கோயில் விழாக்கள் பழைமை வாய்ந்ததாகவும், பாரம்பரியமிக்கதாகவும் உள்ளது.
மாவட்டத்தில் அடா்ந்த வனப் பகுதியில் மந்து என்று அழைக்கப்படுகின்ற 14 இடங்களில் தோடா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த 14 மந்துகளுக்கு தலைமையிடமாக உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து விளங்கி வருகிறது.
உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே காா்டன் மந்து உள்ளது. இந்த மந்தில் தோடா் இன மக்களின் தெய்வமான ‘நாா்ஸ் நாா்ஸ்’ கோயில் உள்ளது.
இக்கோயிலில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு கூரைவேயும் பணியுடன் திருவிழாவும் புதன்கிழமை நடைபெற்றது. ஏரளாமான் தோடா் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேயும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பின்னா், இளைஞா்கள் இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்தினா். இதைத் தொடா்ந்து ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.