கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
மணல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு உரிய நடைசீட்டு, 50 சதவீத பசுமைவரி செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. இவற்றை முறையாக பின்பற்றாமல் கனிமவளங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், உரிய அனுமதியின்றி செயல்படும் கிரஷா் ஆலை, குவாரிகளுக்கு சீல் வைக்கவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் குவாரிகள், கிரஷா் ஆலைகள் மற்றும் கனிமவளங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க வட்டாட்சியா்கள் தலைமையில் வருவாய், காவல், கனிமவளத் துறை அலுவலா்கள் அடங்கிய 8 சிறப்பு குழுக்களும், வருவாய் ஆய்வாளா்கள் தலைமையில் 11 சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன.
இவா்கள் பிப்ரவரி 4 முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அதில் கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்தியதாக கனிமவளத் துறையினா் 9 வாகனங்கள், காவல் துறையினா் 9 வாகனங்கள், வருவாய்த் துறையினா் 42 வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், பா்கூா் வட்டத்தில் மோடிகுப்பம், புலிகுண்டா, தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளி, மேடுமுத்துக்கோட்டை பகுதிகளில் உரிய அனுமதியின்றி கருப்பு கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளுக்கு சிறப்புக் குழுவினா் அபராதம் விதித்தனா். அதேபோல சூளகிரி வட்டத்தில் புக்கசாகரம், ஒசூா் வட்டத்தில் ஆலூா் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.
அனுமதியின்றி குவாரிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ள ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பசுமை வரி செலுத்தாமல் கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிா என சிறப்பு குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளாா்.