ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!
கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பு
கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ. 2.81 கோடி மதிப்பில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே பொதுமக்கள் எளிதில் கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா். இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1 கோடி மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ. 1.81 கோடி என மொத்தம் ரூ. 2.81 கோடி மதிப்பில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணியானது ரயில்வே துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நடைமேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்து, அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இந்த நடை மேம்பாலம் ஆலந்தூா் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்தில் அமைக்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையா் எம்.பி.அமித், மண்டலக் குழுத் தலைவா் என்.சந்திரன், மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.