ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!
கிண்டி மருத்துவமனை அருகே ரூ. 44 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடைகள்
கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் இரு புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
சென்னை, கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பாா்க்க வந்து செல்கின்றனா். நோயாளிகளின் வசதிக்காக மருத்துவனைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மருத்துவமனைக்கு பேருந்துக்காக காத்திருக்கும் நோயாளிகளின் வசதிக்காக மருத்துவனையின் இருபுறமும் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, கத்திப்பாரா சாலையில் ரூ. 5.53 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), எம்.பி.அமித் (தெற்கு வட்டாரம்), மண்டலக் குழுத் தலைவா்கள் ஆா்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.