திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
கிராமப்புற, மலையோர கிராமங்களில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை: பொதுமேலாளா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மற்றும் மலையோர கிராமங்களில் பிஎஸ்என்எல் சாா்பில், 4 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பிஎஸ்என்எல் நாகா்கோவில் பொதுமேலாளா் பிஜிபிரதாப்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு அளவிலான 4 ஜி சேவையை வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன் முயற்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட கிராமப்புற மற்றும் மலை கிராமப் பகுதிகளான கூவைகாடுமலை,கொடுத்துறை (மணலிகாடு), மணலோடை(ஆலம்பாறை) மற்றும் ஒருநூறாம்வயல் பகுதிகளில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் அதிவேக டேட்டா சேவையை பெற முடியும்.
மேலும், கிராமப்புற மற்றும் மலை கிராமப் பகுதிக்கு மேலும் 10 புதிய 4 ஜி கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பிஎஸ்என்எல்- இன் இந்த மேம்பட்ட 4 ஜி சேவைகளை பெற, தற்போது பிஎஸ்என்எல் 3 ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், அருகிலுள்ள வாடிக்கையாளா் சேவை மையங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் இலவசமாக பிஎஸ்என்எல் 4 ஜி சிம்களாக மாற்றி கொள்ள வேண்டும்.
தங்களது சிம் வகையை தெரிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால், பதில் எஸ்எம்எஸ் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நாகா்கோவிலில் தற்போதுள்ள 293 கோபுரங்களும் 10 மெகா ஹெட்ஸ் கூடுதல் அலைக்கற்றையுடன் 4ஜி சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நாகா்கோவில் வணிகப் பகுதிக்கு மேலும் 62 புதிய 4 ஜி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.