தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலை தடுக்க இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்: விஜய்வசந்த் எம். பி.
தமிழக மீனவா்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அதிபருடன் பேசி தீா்வு காணவேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குப்பு: கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடா்ந்து தாக்கி வருகிறது. மேலும், அவா்களை சிறைபிடித்து உடைமைகளையும் கைப்பற்றி வருகிறது. 2024 ஆம் ஆண்டு மட்டும், இலங்கை அரசால் 350 மீனவா்கள் கைது செய்யப்பட்டு 49 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இலங்கை அரசின் அத்துமீறல் அதிகரித்து வருவதற்கு இதுவே சான்று.
1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இரண்டு அரசுகளும் இந்த பிரச்னைக்கு, குழுக்கள் அமைத்து தீா்வு காண முன் வர வேண்டும். இலங்கை அரசு உடனடியாக அங்கு கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும்.
இதனை இலங்கை அதிபருக்கு பிரதமா் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.