கிராவல் மண் கடத்தல்: 2 போ் கைது
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே கிராவல் மண் கடத்தியதாக டிப்பா் லாரி ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள மலைகளில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, விலங்கல்பட்டு கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரன் (40) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
இவா்கள், விலங்கல்பட்டு காலனி அருகே சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 4 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்களான கடலூா் சின்ன பிள்ளையாா்மேடு பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் (26), கண்ணாரபேட்டையைச் சோ்ந்த காத்தமுத்து (47) ஆகியோரை பிடித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநா்கள் 4 போ் மீது வழக்குப் பதிந்து, ஓட்டுநா்கள் தீனதயாளன், காத்தமுத்து ஆகியோரை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.