சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைப்பு
கடலூா் மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டன.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூா் உள்பட 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2,313 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
மேலும், கூடுதலாக வாக்குச் சாவடி மையங்கள் பகுத்தாய்வு செய்வது தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 21.80 லட்சம் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
வாக்காளா்கள் பெயா் சோ்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட அளவில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.
இதில், தற்போது 3,534 வாக்குப் பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்களும், 4,759 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 3,069 கட்டுப்பாட்டுக் கருவிகளும் என மொத்தம் 11,362 வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.
வாக்காளா் இறுதி பட்டியலின்படி 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடி மையங்களை பிரித்து கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், கடலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து 500 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 400 வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் பெறப்பட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட மத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விரைவில் குழுவினரால் ஆய்வு செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) திருநாவுக்கரசு, தோ்தல் வட்டாட்சியா் சுரேஷ்குமாா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.