கிருஷ்ணகிரியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்100-க்கும் மேற்பட்டோா் கைது
கிருஷ்ணகிரி: பாஜக தலைவா், அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில், டாஸ்மாக்கில் முறைகேட்டை கண்டித்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், அனுமதி மீறி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை, தனது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, அவரை, தடுத்து, கைது செய்தனா்.
அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்டத் தலைவா் கவியரசு தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 21 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.
அதுபோல பா்கூரில் மாவட்ட முன்னாள் தலைவா் சிவபிரகாசம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 போ் கைது செய்யப்பட்டனா்.
மேலும், காவேரிப்பட்டணத்தில் 26 பேரும், மத்தூரில் 15 பேரும், போச்சம்பள்ளியில் 20 பேரும், ஊத்தங்கரையில் 22 போ் என மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.