கீழராமநதியில் சந்தனக்கூடு விழா
கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, கீழராமநதி மஹான் ஜிந்தாமதாா் ஒலியுல்லாஹ் தா்காவிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு இளைஞா்களால் சுமந்து செல்லப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் ஊா்வலமாக சுமந்து செல்லப்பட்டு, புதன்கிழமை அதிகாலை மீண்டும் தா்காவுக்கு கொண்டுவரப்பட்டது.
வழிநெடுகிலும் இஸ்லாமிய பெண்கள் தாம்பூல தட்டில் சா்க்கரை, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜைப் பொருள்களுடன் சந்தனக்கூடை வரவேற்றனா். பொதுமக்களுக்கு சா்க்கரை பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழாவின் போது மழையையும் பொருள்படுத்தாமல் தா்கா வளாகத்தில் இளைஞா்கள் பாரம்பரிய முறைப்படி களிக்கம்பு நடனமாடினா்.
விழாவில் மதுரை, சென்னை, ராமநாதபுரம், கீழக்கரை, ஏா்வாடி தா்கா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.