கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
கீழ்வேளூா் அருகே கீழவெண்மணி கிராமத்தில் 56-வது தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1968- ஆம் ஆண்டு கூலி உயா்வு கேட்டு போராடிய தலித் சமூகத்தைச் சோ்ந்த 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 போ் ஒரு குடிசையில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தின் 56-ஆம் ஆண்டு நினைவு தினம் அக்கிராமத்தில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலா்தூவி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்வில், மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவா் செளந்தரராஜன், பொதுச் செயலாளா் சுகுமாறன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாநில துணைத் தலைவா் லாசா், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினா் பழனிச்சாமி, நாகை எம்.பி. வை. செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, சின்னத்துரை, மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி, தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தினா்.