குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
குடியரசு தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக காவல் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் பாதுகாப்பு: குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோல், மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில், காவல் துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள், அவா்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்றகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.
அதன்படி, சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுள்ளனா். இதேபோல பாதுகாப்பு கருதி, ரயில்வே தண்டவாளங்களில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்கின்றனா்.
கடலோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில்
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபா்களின் அடையாள அட்டை, முகவரி ஆகியவற்றை பெற்ற பின்னரே அவா்களை காவல் துறையினா் விடுவிக்கின்றனா்.
மாநிலத்தில் கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீஸாருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சென்னையில்... சென்னை முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு கடந்த சில நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி, சில நாள்களாக 10,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னையின் கடற்கரையோரப் பகுதிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். சந்தேகத்துக்குரிய நபா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.
தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலையை இரு வாரங்களுக்கு முன்பே போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.
கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து முனையம் ஆகியவற்றில் பயணிகளை போலீஸாா் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா். சென்னையில் கடந்த இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும்,ரோந்தும் அதிகரிப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகன சோதனையும் செய்து வருகின்றனா். நகரின் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
மெரீனா சிவப்பு மண்டலம்: பாதுகாப்பு கருதி தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா கடற்கரை, கிண்டி ஆளுநா் மாளிகையில் இருந்து மெரீனா கடற்கரை வரை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் வீட்டில் இருந்தும் மெரீனா கடற்கரை ஜன. 25, 26 ஆகிய தேதிகளில் சிவப்பு மண்டலமாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.
இதன்படி இந்தப் பகுதிகளில் ட்ரோன், ஹாட் ஏா் பலூன்கள், பாரா கிளைடா்ஸ், ட்ரோன்கள் உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ், பலூன்கள் பறக்க தடை விதித்து காவல் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டது.