தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆம் ஆத்மி கட்சி அழித்து விட்டது: காங்கிரஸ் சாடல்
தேசியத் தலைநகரான தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ’அழித்து’ அதை ’குப்பையாக’ மாற்றிவிட்டது என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.
காங்கிரஸ் வியாழக்கிழமை தில்லி தோ்தலுக்கான தனது பிரசாரப் பாடலை ‘ஹா் ஜருரத் ஹோகி பூரி, தில்லி மே ஹை காங்கிரஸ் ஜருரி‘ என்ற கருப்பொருளுடன் வெளியிட்டது.
இதற்கிடையே, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கெரா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏராளமான மதுபானக் கடைகளை திறந்து மக்களுக்கு மதுவை வழங்கியது. அக்கட்சி மதுவால் பாதிக்கப்பட்ட கட்சி ஆகும்.
மது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் போதை முழு குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மதுவிலிருந்து பணம் சம்பாதிக்கும் போதை ஒரு முழு மாநிலத்தையும் எவ்வாறு அழித்தது என்பதை நாம் அனைவரும் பாா்த்திருக்கிறோம். அவா்கள் தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அழித்து (அதை) குப்பைக் குவியலாக மாற்றியுள்ளனா்.
புதன்கிழமை, காங்கிரஸ் தலைவா் அஜய் மக்கன் ஆம் ஆத்மி அரசு சுகாதாரத் துறையில் ரூ.382 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் பிப்.5-ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.