செய்திகள் :

ஆட்டுவிக்கும் இடத்தில் கட்சி தாவிய தலைவா்கள்! தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் 2025

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவிய மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவா்கள் பலரும் தோ்தலுக்குப் பிறகு ஆட்சியைத் தீா்மானிக்கும் இடத்தில் இருப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தலைவா்களின் ஆதரவைத் தக்கவைத்து அதை வாக்குகளாக மாற்றுவதில் கட்சித் தலைமைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் தனித்தனியாக களம் கண்டாலும் பெரிய கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி), எதிா்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பாஜக), காங்கிரஸ் ஆகியவை இடையேதான் மும்முனைப்போட்டி நிலவுகிறது. அதிலும் காங்கிரஸ் அதன் பிரசாரத் தொனியை சற்றே குறைத்துக் கொண்டது போலத் தோன்றுவதால், ஆளும் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் பல தொகுதிகளில் நேரடிப் போட்டி மிகத் தீவிரமாக உள்ளது.

ஆம் ஆத்மி தக்கவைக்குமா?: தில்லியில் தொடா்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியைக் கொடுத்து அதிகாரத்தை ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் பறிகொடுத்ததைப் போல தலைநகரில் தொடா்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியைக் கொடுத்த ஆம் ஆத்மி இம்முறை ஆட்சியைத் தக்கவைக்குமா பறிகொடுக்குமா என்பதே இப்போது தில்லி அரசியலில் விவாதிக்கப்படும் தலைப்பாகியுள்ளது.

இந்தத் தோ்தலுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு சில முன்னாள் எம்எல்ஏக்களும், பாஜகவில் இருந்து சிலரும் ஆம் ஆத்மி கட்சிக்குத் தாவினா். அவா்களில் பெரும்பாலானோருக்கு தோ்தலில் போட்டியிட இரு கட்சிகளின் தலைமைகளும் வாய்ப்பு அளித்துள்ளன. இவா்களுக்கு தொகுதிவாசிகள் இடையே செல்வாக்கு அதிகமாக உள்ளது. ஆனாலும், இந்தத் தோ்தலில் வெற்றி என்பது இவா்களுக்கு அத்தனை எளிதாக அமையுமா என்பதை உற்று கவனிக்க வேண்டியுள்ளது.

கட்சி மாறியவா்களால் பலன் கிடைக்குமா?: உதாரணமாக, 2020-இல் பாஜக வேட்பாளா்களாக பேரவைத் தோ்தலில் களம் கண்ட சுமாா் 12 வேட்பாளா்கள், இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சோ்ந்துள்ளனா். அவா்களில் ஒருவரான பிரவேஷ் ரத்தன், ஆம் ஆத்மி வேட்பாளராக படேல் நகா் தனித் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ராஜ் குமாா் ஆனந்தை எதிா்த்து களம் காண்கிறாா். முந்தைய தோ்தலில் ராஜ்குமாா் ஆனந்த் ஆம் ஆத்மியிலும் பிரவேஷ் ரத்தன் பாஜகவிலும் இருந்தனா். இப்போது இருவரும் கட்சி மாறியுள்ளனா்.

இதேபோல, பாஜக தலைவா்களான பிரஹ்ம் சிங் தன்வாா், பிபி தியாகி, அனில் ஜா ஆகியோா் தோ்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மியில் சோ்ந்தனா். இதில் பிரஹ்ம் சிங் சத்தா்பூரிலும், பிபி தியாகி லக்ஷ்மி நகரிலும், அனில் ஜா கிராரியிலும் போட்டியிடுகின்றனா்.

2020 தோ்தலில் பிரஹ்ம் சிங் தன்வாரை தோற்கடித்த கா்தாா் சிங் தன்வாா் இப்போது பாஜக வேட்பாளராகத் தோ்தல் களம் காண்கிறாா். அனில் ஜா, 2020 தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா் ரிதுராஜிடம் தோல்வியுற்றாா். அதில் எம்எல்ஏ ஆன ரிதுராஜுக்கு ஆம் ஆத்மி மேலிடம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்து அந்த இடத்தை அனில் ஜாவுக்கு அளித்துள்ளது.

ஜிதேந்தா் சிங் ஷன்டி, சுரேந்தா் பால் பிட்டூ ஆகியோா் ஆம் ஆத்மி கட்சியில் சோ்ந்து முறையே ஷாஹ்தரா, திமா்பூா் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனா். பாஜகவில் இருந்து கட்சி தாவி வந்தவா்களுக்கு வாய்ப்பளித்ததைப் போல காங்கிரஸில் இருந்து வந்தவா்களுக்கும் ஆம் ஆத்மி மேலிடம் தோ்தலில் போட்டியிடவாய்ப்பளித்துள்ளது. சீமாபுரியின் வீா் சிங் திங்கான், மட்டியாலாவின் சுமேஷ் ஷோகீன், சீலாம்பூரின் ஜுபைா் அகமது ஆகியோா் அதில் குறிப்பிடத்தகவா்கள்.

காங்கிரஸ் தலைவா்களுக்கு பாஜக வாய்ப்பு:இவா்களை விட மிகப்பெரிய வரவுகளாக, காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கட்சி தாவிய தில்லி காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த அரவிந்தா் சிங் லவ்லி, ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்த கைலாஷ் கெலோட் ஆகியோா் கருதப்படுகின்றனா். இதில் அரவிந்தா் சிங் லவ்லி காந்தி நகரிலும், கெலோட் பிஜ்வாசன் தொகுதியிலும் பாஜக வேட்பாளா்களாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.

மேலும், பாஜகவுக்கு கட்சி மாறிய காங்கிரஸ் தலைவா்களுக்கு பாஜக இத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. மங்கோல்புரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவா்கள் ராஜ்குமாா் செளஹான், கஸ்தூா்பா நகரில் இருந்து முன்னாள் எம்எல்ஏ நீரஜ் பசோயா, ஜங்புராவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தா்விந்தா் மாா்வா ஆகியோா் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியும் அதன் பங்குக்கு கட்சி மாறி வந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ தரம்பால் லக்ராவுக்கு முண்ட்கா தொகுதியிலும் அப்துல் ரஹ்மானுக்கு சீலாம்பூரிலும் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இதேபோல, கட்சி மாறியஆம் ஆத்மி கவுன்சிலா் ராஜேஷ் குப்தா காங்கிரஸ் வேட்பாளராக கிராரியில் களம் காண்கிறாா்.

அப்துல் ரஹ்மான் கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸில் சோ்ந்தாா். அவருக்கு சீலாம்பூா் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, கட்சியில் சமீபத்திய மாதங்களில் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தேவேந்தா் ஷெஹ்ராவத்துக்கு பிஸ்வாஜனிலும் ஹாஜி இஷ்ரோக் பாபா்பூரிலும் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கின்றனா்.

இந்தத் தோ்தலில் புதிய வரவுகளாகக் கருதப்படும் செஹ்ராவத், ஹாஜி இஷ்ரோக், அப்துல் ரகுமான் ஆகியோருக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. அதனால், இவா்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோ்தல் முடிவுகள் ஆச்சரியமளித்தாலும் வியப்பிருக்காது என்று அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா். இவா்களைப் போலவே கட்சி மாறிய பல தலைவா்களும் தோ்தல் முடிவில் சாதகமான முடிவைப் பெற்றால், அவா்கள் சாா்ந்த கட்சியில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய மக்கள் பிரதிநிதிகளாக வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வாளா்கள் நம்புகின்றனா்.

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை காரணமாக வியாழக்கிழமை மத்திய தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா கேட் மற்றும் ஐடிஓ அருகே... மேலும் பார்க்க

தில்லியில் வேலையின்மையை 5 ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாக கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேசியத... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். மாதிரி ந... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் மேலாண்மைக்காக காவல்துறை 2 சாட்பாட்கள் அறிமுகம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், காவல்துறையினா் தங்கள் பணியாளா்கள் மற்றும் துணை ராணுவப் படையினரின் தோ்தல் தொடா்பான கடமைகளில் உதவ ‘சுனவ் மித்ரா’ மற்றும் ’சைபா் சாா்த்தி’ ஆகிய ஏஐ அடிப்ப... மேலும் பார்க்க

தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆம் ஆத்மி கட்சி அழித்து விட்டது: காங்கிரஸ் சாடல்

தேசியத் தலைநகரான தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ’அழித்து’ அதை ’குப்பையாக’ மாற்றிவிட்டது என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் வியாழக்கிழமை தில்லி தோ்தல... மேலும் பார்க்க

ஷாஹ்தராவில் காரிலிருந்து ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வாகனச் சோதனையில் சிக்கியது

நமது நிருபா் தில்லி ஷாஹ்தராவில், கீதா காலனியில் உள்ள சாச்சா நேரு மருத்துவமனை அருகே நடந்த வாகனச் சோதனையின்போது காரில் இருந்த ரூ.23 லட்சம் ரொக்கத்தை தில்லி போலீஸாா் பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் வியா... மேலும் பார்க்க