பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
தேசியத் தலைநகா் தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஜன.7 முதல் ஜனவரி 22 வரை இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் கலால் சட்டம் உள்பட பல்வேறு விதிகளின் கீழ் மொத்தம் 17,879 போ் கைது செய்யப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கு முன்னதாக, நகர காவல் துறை எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக தில்லி காவல்துறையினா் 504 வழக்குகளைப் பதிவு செய்து, 270 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 372 தோட்டாக்களை பறிமுதல் செய்தனா். மேலும், ரூ.1.3 கோடிக்கு மேல் மதிப்புள்ள 44,265 லிட்டா் மதுபானம், ரூ.20 கோடிக்கு மேல் மதிப்புள்ள 110.53 கிலோ போதைப்பொருள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனா்.
சட்ட அமலாக்க அதிகாரிகள் ரூ.4.56 கோடி ரொக்கம் மற்றும் 37.39 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு பிப்.5-ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தில்லி தோ்தல் களத்தில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருக்கும் காங்கிரஸ் ஆகிய பெரிய கட்சிகளும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), அகில இந்திய மஜ்லிஸ்-இ இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி (ஏஐஎம்ஐஎம்) உள்ளிட்ட சிறிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.