ஷாஹ்தராவில் காரிலிருந்து ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வாகனச் சோதனையில் சிக்கியது
நமது நிருபா்
தில்லி ஷாஹ்தராவில், கீதா காலனியில் உள்ள சாச்சா நேரு மருத்துவமனை அருகே நடந்த வாகனச் சோதனையின்போது காரில் இருந்த ரூ.23 லட்சம் ரொக்கத்தை தில்லி போலீஸாா் பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: நடைபெறவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி போலீஸாா் புதன்கிழமை இரவு தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனா். அப்போது, வேகமாக ஓட்டிவரப்பட்ட காா் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அதில், தில்லி சத்தா்பூரைச் சோ்ந்த ஓட்டுநா் கிருஷ்ணபால் ஜெயின் (69) என்பவரிடமிருந்து போலீஸாா் ரூ.23 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இந்த வாகனம் ஜெயினின் மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட தொகை ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்ததால், இந்த விவகாரம் வருமான வரித் துறைக்கு மேல் விசாரணைக்காக அனுப்பப்பட்டது. தோ்தல் தொடா்பான நிதி விதிமுறைகளின் கீழ் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.