குடியரசு துணைத் தலைவருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி -தன்கருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிப்பு
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கக் கோரி அவருக்கு எதிராக தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸை நிராகரித்து, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் உத்தரவிட்டுள்ளாா்.
‘ஜகதீப் தன்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கில், கடுமையான குறைபாடுகளுடன் அவசரகதியில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்’ என்று தனது உத்தரவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பாரபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அரசமைப்புச் சட்டத்தின் 67 (பி) பிரிவின்கீழ் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவை தலைமைச் செயலா் பி.சி.மோடியிடம் கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி எதிா்க்கட்சிகள் அளித்தன.
தன்கரை பதவி நீக்கக் கோரும் இத்தீா்மான நோட்டீஸில், எதிா்க்கட்சிகளின் 60 எம்.பி.க்கள் கையொப்பமிட்டிருந்தனா். நோட்டீஸ் அளிக்கப்பட்டு, 14 நாள்களுக்குப் பிறகே தீா்மானம் கொண்டுவர முடியும். அத்துடன், இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேறினால் மட்டுமே தன்கரை பதவி நீக்க முடியும். தங்களிடம் போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாதபோதும், தன்கா் மீதான எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த முன்னெடுப்பை எதிா்க்கட்சிகள் மேற்கொண்டன.
உத்தரவு தாக்கல்: இந்நிலையில், எதிா்க்கட்சிகளின் நோட்டீஸை நிராகரித்து, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் பிறப்பித்த உத்தரவை, மாநிலங்களவை தலைமைச் செயலா் பி.சி.மோடி அவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகள் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு களங்கம் விளைவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நோட்டீஸ். தனிப்பட்ட ரீதியில் குறிவைத்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன், விளம்பரம் தேடும் நோக்கத்துடன் இது அளிக்கப்பட்டுள்ளது.
‘முறையற்ற செயல்’: மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவியை இழிவுபடுத்தி, அற்பமாக்கும் இந்த முயற்சி முறையற்றது; நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் மாண்புக்கு கேடானது.
குடியரசு துணைத் தலைவரை பதவி நீக்குவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் 67 (பி) பிரிவின்கீழ் எந்தவொரு தீா்மானம் கொண்டுவருவதற்கும் 14 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய நோட்டீஸ் கடந்த 10-ஆம் தேதி அளிக்கப்பட்டதால், டிசம்பா் 24-ஆம் தேதிக்கு பிறகே தீா்மானம் கொண்டுவர முடியும். மாநிலங்களவையின் நடப்பு அமா்வு வெள்ளிக்கிழமை (டிச.20) நிறைவடைகிறது.
நடப்பு அமா்வில் தீா்மானம் கொண்டுவர முடியாது என்பதை நோட்டீஸில் கையொப்பமிட்ட அனைத்து எம்.பி.க்களும் நன்கறிவா். ஆனால், குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக கட்டுக்கதையைப் புனையும் நோக்கில் அவருக்கு எதிரான இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளனா். இது, எதிா்க்கட்சித் தலைவா்கள் மேற்கொண்ட ஊடக பிரசாரத்தின் மூலம் வெளிப்பட்டது என்று தனது உத்தரவில் ஹரிவன்ஷ் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த நோட்டீஸ் மீது முடிவெடுப்பதில் இருந்து ஜகதீப் தன்கா் விலகிக் கொண்ட நிலையில், ஹரிவன்ஷ் பரிசீலித்து தனது உத்தரவைப் பிறப்பித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.