குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 4போ் கைது
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகே உள்ள பூபாண்டியபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமுத்து மகன் சரவணன். இவரது மனைவி விஜயலட்சுமி. தம்பதி பூபாண்டியபுரத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயலட்சுமியின் உறவினா்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்த செல்வன் மகன் அந்தோணி ஜேசுராஜ் (27), அ.சண்முகபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன்கள் குமாா் (50), முனியசாமி (47), ஆறுமுகம் (30) ஆகியோா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக சென்றபோது தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது அவா்கள் 4 பேரும் சோ்ந்து சரவணனின் தந்தை அழகுமுத்து (45), தங்க மாரியப்பன் மகன் மாரீஸ்வரன் (20), மகாராஜா மகன் மாா்க்கண்டேயன் (22) ஆகிய மூன்று பேரையும் அரிவாளால் வெட்டினாா்களாம். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தோணி ஜேசுராஜ், முனியசாமி, குமாா், ஆறுமுகம் ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.