அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
குடைப்பாறைப்பட்டியில் விநாயகா் சிலை ஊா்வலம்
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் விநாயகா் சிலை ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேகம்பூா் பள்ளிவாசல் வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள கருப்பணசாமி கோயிலில் ஊா் பொதுமக்கள் சாா்பில் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை கோட்டைக்குளத்துக்கு எடுத்துச் செல்லும் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாக, இந்து அமைப்புகள் சாா்பில் இந்த வழியாக விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், ஊா் மக்களின் சாா்பில் நடைபெறும் விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், துணை காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் ஆகியோா் தலைமையில், நக்சல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாா் உள்பட 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பேகம்பூா் பள்ளிவாசல் முன் காவல் துறை வாகனம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தது. குடைப்பாறைப்பட்டியிலிருந்து தொடங்கிய ஊா்வலம், மதுரை- வத்தலகுண்டு சமிஞ்சை (சிக்னல்) பகுதியிலிருந்து யானைத் தெப்பம், மேற்கு ரத வீதி வழியாக கோட்டைக்குளத்தில் நிறைவடைந்தது.