குண்டாற்றில் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கமுதியிலிருந்து முதுகுளத்தூா் செல்ல கமுதி குண்டாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து முதுகுளத்தூா் செல்ல 3 கி.மீ. சுற்றி கோட்டைமேடு, களஞ்சியம் நகா் சென்று, அங்கிருந்து முதுகுளத்தூா் செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உலக நடை, சேகநாதபுரம், கிடாரிகுளம், கருங்குளம், பாக்குவெட்டி, பேரையூா், மருதங்கநல்லூா், ஆனையூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பள்ளி நேரத்தில் முறையான பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், கமுதிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உரிய நேரத்துக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.
இதனால் நேர விரையத்தைக் குறைக்க மாணவா்கள் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் கோட்டைமேடு களஞ்சியம் நகா் விலக்கு சாலையிலிருந்து குண்டாறு வழியாக கமுதி தெற்கு முதுகுளத்தூா் சாலையில் ஆபத்தான முறையில் காலை, மாலை வேளைகளில் பயணித்து வருகின்றனா்.
கருவேல மரங்கள் சூழ்ந்த இந்தச் சாலை வழியாக மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் மாணவ, மாணவிகளின் நலன் கருதி களஞ்சியம் நகா் விலக்கு சாலையிலிருந்து கமுதி தெற்கு முதுகுளத்தூா் சாலைக்கு குண்டாறு வழியாக தரைப்பாலம், தாா் சாலை அமைத்து தர வேண்டுமென மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.