சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
தனுஷ்கோடி அருகே இலங்கைத் தமிழா்கள் 4 போ் மீட்பு
இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் அழைத்துவரப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழா்கள் 4 பேரை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹோவா் கிராப்ட் கப்பல் திங்கள்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டது.
அப்போது, தனுஷ்கோடி அருகேயுள்ள மூன்றாம் மணல் திட்டில் ஆள்கள் நடமாட்டம் இருப்பதை கடலோரக் காவல் படையினா் கண்டனா். மேலும், அங்கிருந்தவா்கள் உதவி கோரியதையடுத்து, அங்கு சென்ற கடலோரக் காவல் படையினா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வம் (37), அவரது மனைவி கிருபனா (33), மகன்கள் சிபின் (9), சாா்லின் (5) என்பதும், இந்தியாவுக்கு வருவதற்காக மன்னாரிலிருந்து படகு மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டதும் தெரியவந்தது.
இவா்களை படகில் அழைத்து வந்த நபா்கள் ராமேசுவரம் வந்துவிட்டதாகக் கூறி, மூன்றாம் மணல் திட்டில் திங்கள்கிழமை அதிகாலை இறக்கிவிட்டுச் சென்றனராம்.
இதுகுறித்து இந்திய கடலோரக் காவல் படையினா், தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் 4 பேரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
விசாரணைக்குப் பிறகு, இவா்கள் 4 பேரும் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.