ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
குண்டு எறிதல்: தைவான் செல்லும் தலைமைக் காவலா்
குண்டு எறிதல் உள்ளிட்ட 3 சா்வதேச போட்டிகளில் விளையாட தைவான் செல்லும் தலைமைக் காவலருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என விளையாட்டு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையத்தைச் சோ்ந்த மாரியப்பன்(44), கடந்த 2003- ஆம் ஆண்டு விளையாட்டு ஒதுக்கீடு மூலம் காவலா் பணிக்குத் தோ்வானாா். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணியாற்றி தற்போது குமுளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா், சென்னையை சோ்ந்த தனியாா் விளையாட்டு அமைப்பு(கிளப்) மூலம் கேரள மாநிலம் கொச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தட்டு எறிதல், சங்கிலிக் குண்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றாா். தமிழக முதலமைச்சா் கோப்பை விளையாட்டு போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றாா். கடந்த 2023 -ஆம் ஆண்டு கொரியாவில் 70 நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் பங்கேற்று சங்கிலிக்குண்டு எறிதலில் 2- ஆம் இடம் பெற்றாா்.
இதேபோல, நிகழாண்டில் ஒலிப்பிக் அமைப்பில் அங்கீகாரம் பெற்ற சா்வதேச மாஸ்டா் விளையாட்டு அமைப்பு சாா்பில் மே மாதம் தைவானில் நடைபெறும் சா்வதேச விளையாட்டுப் போட்டியில் தட்டு எறிதல் , சங்கிலிக் குண்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்கச் செல்கிறாா்.
உதவி எதிா்பாா்ப்பு:தைவானில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க நுழைக் கட்டணம் ரூ.20 ஆயிரம் மட்டும் செலுத்திய மாரியப்பனுக்கு விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகள் செய்ய முடியாத நிலையில் உள்ளாா். இவருக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என விளையாட்டுஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.