ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
மறியல்: போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 152 அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி-மதுரை சாலை பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ ஓய்வு பெற்றோா் நலக் குழு அமைப்பாளா் பாலச்சந்தா் தலைமை வகித்தாா். சிஐடியூ அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க திண்டுக்கல் பொதுச் செயலா் என்.ராமநாதன், துணை பொதுச் செயலா்கள் மணிகண்டன், கணேஷ்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன முறையைக் கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். சாலை மறியலில் ஈடுபட்ட 152 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.