நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ரா...
கும்கி : 'இந்த ஒரு பாட்டுனால நான் பல நாடுகளுக்கும் போனேன்..!’ - நெகிழும் மகிழினி மணிமாறன்
சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வபோது பல பழைய பாடல்களெல்லாம் டிரெண்டிங் அடிக்கும்! அந்த வரிசையில் தற்போதைய டிரெண்ட் `கும்கி' படத்தில் வரும் `சொய் சொய்' பாடல்தான். `கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான்!' என்ற வரியின் முழு அர்த்தத்தையை முழுமையாகப் இப்போதுதான் புரிந்துக் கொள்கிறோம் எனக் கூறி பலரும் இந்தப் பாடலை பதிவிட்டு வருகிறார்கள்.
இப்பாடல் கொண்டாட்ட இசையைக் கொண்டது. ஆனால், இதன் வரிகளோ காதல் பற்றிய பல சிந்தனைகளை உண்டாக்கும். இந்தப் பாடலைப் பாடியவர் பாடகி மகிழினி மணிமாறன். இந்தப் பாடல்தான் இவர் சினிமாவில் பாடிய முதல் பாடல். சமீப நாடகளாக இவர் பாடிய பாடல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்தப் பாடல் குறித்தும், தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது பற்றியும் பேசுவதற்கு அவரை தொடர்புக் கொண்டோம்.
`இப்போ டிரெண்ட் ஆகுது'
பேச தொடங்கிய மகிழினி மணிமாறன்,`` சமூக வலைதளப் பக்கங்கள்ல என்னுடைய குழந்தைங்கதான் ஆக்டிவ்வாக இருக்காங்க. அவங்கதான் என்கிட்ட `அம்மா, நீ பாடின பாட்டு இப்போ டிரெண்ட் ஆகுது'னு சொன்னாங்க. அந்தப் பாடலுடைய அர்த்தங்களையும் வரிகளையும் நாங்க அப்போ புரிஞ்சுக்கல. பாடல் பேசுகிற அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரியுதுனு மக்கள் சமூக வலைதளப் பக்கங்கள்ல போடுறாங்க.
இப்போ மறுபடியும் பாடலை மக்கள் டிரெண்ட்டாக்குவது ரொம்பவே மகிழ்ச்சி. சொல்லப்போனால், இந்தப் பாடல் எல்லோருக்குமே பரிச்சயமானது.

ஆனால், இந்தப் பாடலை பாடினது நான்தான்னு மக்களுக்கு தெரியாது. இப்போ நான் கச்சேரிகளுக்கு போனால்கூட என்னை வேற எந்தப் பாடலையும் பாட வைக்கமாட்டாங்க. இதையே மூன்று முறை பாட வைப்பாங்க.
இப்படியான விஷயங்கள் இந்த பாடலும் மொத்த சினிமாவும் எந்தளவுக்கு வலிமையானதுனு எனக்கு புரிய வச்சது. பொதுவாக, நான் மக்களிசை பாடல்களைப் பாடுவேன்.
என்னுடைய கணவருடைய புத்தர் கலைக் குழுவுல நான் தொடர்ந்து பாடல்கள் பாடுவேன். அப்படிதான் மக்கள் மத்தியில முதல்ல நான் பரிச்சயமாகியிருந்தேன்.
முக்கியமாக, என்னுடைய பாடல்கள்ல பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி நான் அதிகமாகப் பாடுவேன். அப்படி நான் பாடுகிற பாடலை கேட்ட ஒரு தபேலா கலைஞர் என்னை சினிமாவுல பாட வைக்கிறதாக சொன்னாரு.
நான் எளிமையான பின்னணியைக் கொண்ட குடிசையில வாழ்ந்த பெண். அப்படியானவங்களுக்கு சினிமா பெரிய கனவு. ஆசை இருக்கும். ஆனால், சினிமாவுக்குப் போவோம்னு ஒரு நாளும் நினைச்சது கிடையாது. இதனை தொடர்ந்து எனக்கு சினிமாவுல பாடுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது.
ஆனால், அந்த சமயத்துல என்னால போக முடியல. வேற வாய்ப்புக்காக அப்போ கேட்டேன். இதன் பிறகு ஒரு ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இமான் சார்கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

`இந்தப் பாடல்னால நான் பல நாடுகளுக்கும் போனேன்’
இமான் சார், பிரபு சாலமன் சார், யுகபாரதி சார்னு மூணு பேரும் அப்போ இருந்தாங்க. சினிமாவுல நான் பாடின முதல் பாடல் `சொய் சொய்'தான். அந்தப் பாடலை பாடி முடிச்சதும் எனக்கு இவங்க மூணு பேரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தாங்க.
அதுவரைக்கு நான் கச்சேரிகள்ல பாடியிருக்கேன். அதுல இருந்து சினிமா முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அந்தப் பாடலை பாடி முடிச்சதும் எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வந்தது. நான் முன்னாடி பல அரசு பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளுக்குப் பாடுவதற்கு பயிற்றுவித்திருக்கேன்.
இந்தப் பாடலும் குழந்தைகளுக்கு ரொம்பவே ஃபேவரைட். அந்தக் குழந்தைகளுடைய ஆசீர்வாதம்தான் இந்தப் பாடலுடைய வெற்றிக்குக் காரணம்னு என்னை அப்போ நம்ப வச்சது! " எனக் நெகிழ்ந்த அவர், `` இந்தப் பாடல்னால நான் பல நாடுகளுக்கும் போனேன். இலங்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அங்க நான் போன சமயத்துல அங்கிருந்து மக்கள என்னை அரவணைச்சு பேசினாங்க. மகிழினிங்கிற பெயரை வச்சு நான் இலங்கையைச் சேர்ந்தவள்னு நினைச்சு அங்க இருந்து இங்க ரெக்கார்டிங் வரமுடியாதுனு நினைச்சு கூப்பிடாமல் இருந்திருக்காங்க. ஆனால், அந்த அடையாளம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கு.
அதுபோல அமெரிக்காவுக்கும் இந்த பாடலினால போனேன். இமான் சார் இந்தப் பாடலைப் பாடும்போது ஜாலியாக பாடுங்கனுதான் சொன்னாங்க. அதே மாதிரி, பிரபு சாலமன் சார் `நல்லா பாடுறீங்க மா'னு சொன்னாரு.
இப்படியான விஷயங்கள் அவங்க சொன்னது நம்பிக்கையைக் கொடுத்தது." என்றவரிடம் இந்தப் பாடலுக்கு அப்போது கிடைத்த அங்கீகாரங்கள் குறித்து கேட்டோம். அவர், `` முக்கியமாக, இந்தப் பாடலுக்கு ஆனந்த விகடன்ல அப்போ எனக்கு விருது கொடுத்தாங்க.

ஒரு முறை கச்சேரிக்கு போயிருந்தப்போ, ஒரு அம்மா என்கிட்ட `முன்னாடியெல்லாம் என் குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவேன். இப்போ சொய் சொய் பாடலைக் போட்டுக் காட்டிதான் சோறு ஊட்டுறேன்'னு சொன்னாங்க. இதுதான் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன்." எனக் கூறினார். மகிழினி பாடிய பாடல்கள் எதுவும் சமீப நாட்களில் வெளிவரவில்லை.
அவரிடம் `எப்போ உங்க குரலை மீண்டும் திரையில் பார்க்கலாம்' எனக் கேட்டால்...``என்னை ரெக்கார்டிங் கூப்பிட்டால் கண்டிப்பாகப் போவேன். நானும் இப்போ வாய்ப்புகளுக்கு கேட்டுட்டுதான் இருக்கேன். நிச்சயம் பாடுவேன். உங்களுக்கு பாடல்களைக் கொடுப்பேன்" என்ற நேர்மறையான வார்த்தைகளோடு முடித்துக் கொண்டார்.