கும்பகோணத்தில் 2,800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
கும்பகோணம் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 2,800 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி வைத்து குருணையாக விற்பனை செய்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் மூட்டைகளுடன் வந்தவா்களை நிறுத்தி விசாரித்தனா்.
இதில், அவா்கள் மூப்பக்கோவில் பிரபாகரன் (37), கீழகொட்டையூா் ஆகாஷ் (19) என்பதும், மூட்டைகளில் ரேசன் அரிசியை கடத்தி வந்து அரிசி ஆலையில் பதுக்கிவைத்து குருணையாக விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இவா்கள் கொடுத்த தகவலின்படி, அரிசி ஆலை உரிமையாளா் மேலக்காவிரி முதலி தெருவைச் சோ்ந்த சசிகுமாா் (35) என்பவரை பிடித்து விசாரித்து, அரிசி ஆலையில் இருந்த ரேஷன்அரிசி குருனை 2,500 கிலோ மற்றும் 300 கிலோ ரேசன் அரிசி என மொத்தம் 2,800 கிலோவை கைப்பற்றி 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.