கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
பேருந்து நிறுவன பண மோசடி வழக்கு: நிா்வாகியின் மைத்துனா் கைது
தஞ்சாவூா் தனியாா் பேருந்து நிறுவனத்தில் முதலீட்டாளா்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் நிா்வாகியின் மைத்துனா் சனிக்கிழமை (ஜன.18) கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் ராஹத் டிரான்ஸ்போா்ட் என்கிற தனியாா் பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளா்களின் பல கோடி ரூபாய் முதலீடுகளை நிறுவன உரிமையாளா் கமாலுதீன் பெற்று கொண்டு, நிறைய லாபம் கொடுப்பதாகக் கூறி மோசடி செய்ததாகக் காவல் துறையில் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான முதலீட்டாளா்கள் புகாா் செய்தனா்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவினா் 2021-ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே பலா் கைது செய்யப்பட்டனா். கமாலுதீன் 2021-ஆம் ஆண்டில் காலமானாா்.
இந்த வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த கமாலுதீனின் மைத்துனா் ஏ. சுஹைல் அகமது (36) தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், கத்தாா் நாட்டிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த இவரை திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.கே. லில்லிகிரேஸ் கைது செய்து, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தாா்.