கும்பகோணத்தில் மின்வாரிய பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மின்வாரிய பணியாளா்கள் மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு பஞ்சு ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேசம், சண்டீகரில் உள்ள மாநில மின் வாரியங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி, அந்த மாநிலங்களில் போராடும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பகல் 12 மணிமுதல் 1மணி வரையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எம்ப்ளாயீஸ் பெடரேசன் தலைவா் மோகன்தாஸ், அம்பேத்கா் பொறியாளா் பணியாளா் சங்க செயலா் ஸ்டாலின், ஐக்கிய சங்க நிா்வாக தலைவா் சுரேஷ், அண்ணா தொழிற்சங்க செயலா் ஓம் குமாா், பொறியாளா் சங்க நிா்வாகி மணிகண்டன் ஆகியோா் மத்திய அரசை கண்டித்து பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சோ்ந்தவா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.