குருபூர்ணிமா : ஷீரடி சாய்பாபாவுக்கு ரூ.59 லட்சத்தில் தங்க கிரீடம் - காணிக்கை செலுத்திய பக்தர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஷீரடி சாய் பாபா கோயில் இந்திய அளவில் மிகவும் பிரபலம். இக்கோயிலில் குருபூர்ணிமா விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். குருபூர்ணிமாவையொட்டி நேற்று நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் ஷீரடிக்கு வந்திருந்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது.
பக்தர்கள் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாய்பாபாவிற்கு தாராளமாக காணிக்கை செலுத்தியுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி கதில்கர் கூறுகையில், ''குரு பூர்ணிமா 1908-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்கள் தாராளமாக காணிக்கை மற்றும் நன்கொடை செலுத்துகின்றனர். ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை உட்பட 61 நாடுகளில் இருந்து ஷீரடி சாய் பாபாவை தரிசிக்க வருகின்றனர்.

இந்த ஆண்டு குரு பூர்ணிமாவிற்கு பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை சாய்பாபாவிற்கு காணிக்கையாக செலுத்தி இருக்கிறார். அது 566 கிராம் எடை கொண்டதாகும். இதேபோன்று 54 கிராம் தங்க பூக்கள், 2 கிலோ எடையுள்ள வெள்ளி நெக்லஸ் போன்றவற்றையும் அந்த பக்தர் காணிக்ககையாக செலுத்தினார். ஆனால் அவர் தனது பெயரையோ அல்லது ஊரையோ தெரிவிக்க மறுத்துவிட்டார்'' என்று தெரிவித்தார். இதற்கு முன்பு பக்தர்கள் இதே போன்று தங்களது பெயரை வெளியிடாமல் தங்க ஆபரணங்களை சாய்பாபாவிற்கு காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர்.
சென்னையை சேர்ந்த கே.வி.ரமணி என்ற தொழிலதிபர் ரூ.100 கோடியை சாய்பாபா கோயிலுக்கு நன்கொடையாக கொடுத்தார். அந்த நன்கொடை பணத்தில் கோயில் நிர்வாகம் சாய் ஆஸ்ரம் என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை கட்டி இருக்கிறது. சாய் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ரமணி தனது 80 சதவீத சொத்துக்களை சாய்பாபா கோயிலுக்கு கொடுத்துவிட்டார். நாடு முழுவதும் 450 சாய்பாபா கோயில் கட்ட நிதியுதவியும் செய்து இருக்கிறார். குருபூர்ணிமா பண்டிகையை இந்துக்கள், புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர் கொண்டாடுவது வழக்கமாகும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...