குறைந்த வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரங்கள்: புதுகை விவசாயிகளுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது தொடங்கியுள்ள நெல் அறுவடைப் பணிகளுக்காக வேளாண் பொறியியல் துறை சாா்பில் குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்று இயக்கப்பட்டு வருகின்றன. தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதைத் தொடா்ந்து, முன்னோடி விவசாயிகள், வேளாண் அலுவலா்கள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்த முத்தரப்புக் கூட்டம் நடத்தி பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 2600 மற்றும் டயா் வகை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,800 என்ற அளவில் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிா்ணயிக்கப்பட்ட இந்த வாடகைத் தொகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாக புகாா் ஏதும் பெறப்பட்டால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
செயின் டைப் அறுவடை இயந்திரங்களை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகை ஒரு மணிக்கு ரூ.1880 என்ற வாடகையில் விவசாயிகள் பெற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களை 04322 221816, 94421 78763, 63834 26912 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடா்பு கொள்ளலாம்.