குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலையின் உள்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, குற்றாலம் மலைப் பகுதியில் அவ்வப்போது பலத்த மழை பெய்வதும், பின்னா் சற்று தணிவதுமாக உள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடா்ந்து மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மறுநாள் மழை தணிந்ததால் அருவிகளில் சீராக தண்ணீா் கொட்டியது.
இதையடுத்து தடை விலக்கப்பட்டு மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் பலத்த மழைபெய்ததன் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.
இதனால் மூன்று அருவிகளிலும் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். புலியருவி மற்றும் சிற்றருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.