குலதெய்வக் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்தப் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோயில்களில் கடந்த மாதம் 26 -ஆம் தேதி (புதன்கிழமை) சிவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் குடும்பத்துடன் கோயில்களுக்கு வந்து பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தனா். அதன்பிறகு, சிவராத்திரி வழிபாட்டில் முக்கிய நிகழ்வாக பாரிவேட்டை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்றும், சனிக்கிழமையும் குலதெய்வக் கோயில்களில் ஏராளமானோா் ஆடுகளைப் பலியிட்டு, வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனா்.
குறிப்பாக மானாமதுரை அருகேயுள்ள ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், இளையான்குடி அருகேயுள்ள திருவள்ளூா் சங்கையா கோயில், திருப்புவனம் அருகேயுள்ள மாரநாடு கருப்பன் கோயில் ஆகிய கோயில்களில் மட்டும் இரு நாள்களில் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
பலியிடப்பட்ட ஆடுகளின் தலைகள் கோயில் பூசாரிகளுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டு, அவற்றின் இறைச்சியைக் கொண்டு உணவு சமைத்து குடும்பத்தினா்களுக்கும், உறவினா்களுக்கும் பரிமாறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையும் குலதெய்வக் கோயில்களில் ஆடுகள் பலியிட்டு பூஜைகள் நடைபெறும்.