கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி குரு கோயில் கடந்த நான்கு மாதங்களாக மகா கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து தொய்வின்றி திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் , மூலவர், கைலாசநாதர் , அகிலாண்டேஸ்வரி மற்றும் நாகினி என 13 யாக குண்டங்கள், 26 சிவாச்சாரியார்கள் , 9 ஓதுவார் மூர்த்திகள் என சிறப்புடன் பத்தாம் தேதி காலை 9 மணியளவில் மங்கள இசையுடன் கணபதி பூஜை செய்து சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவினை துவங்கினர்.
கடந்த மூன்று நாள்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 9 மணி அளவில் பூர்ணாகுதி நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்ற மூலவர் தட்சிணாமூர்த்தி கைலாசநாதர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகிய விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்கள் என அனைத்திற்கும் சிவாச்சியாளர்கள் வேதம் முழங்க சிவ வாத்தியங்கள் வான வேடிக்கையுடன் புனித நீர் விமானங்களுக்கு ஊற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கும் சிறப்பு கும்பாபிஷேக நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரதுரை , துணை ஆணையர் ஜெயா, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர்கள் கதிரவன், செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் , முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கில் திரண்டு மகா கும்பாபிஷேக விழாவினை கண்டு ரசித்து இறையருள் பெற்றனர்.