கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அருகேயுள்ள அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
அணை நீா்மட்டம் 24.54 அடியாக (மொத்த கொள்ளளவு 27 அடி) இருந்த நிலையில், அணையிலிருந்து வலது, இடது கால்வாய்களில் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தண்ணீரைத் திறந்து விட்டாா்.
மொத்தம் 53 கி.மீ. நீளம் கொண்ட வலது கால்வாயில், 26 கி.மீ. வரையிலும், 9.3 கி.மீ. நீளம் கொண்ட இடது கால்வாயில் முழுமையாகவும் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறக்கப்பட்டது. வலது கால்வாயில் விநாடிக்கு 40 கன அடி, இடது கால்வாயில் விநாடிக்கு 14 கன அடி வீதம் ஒரு வாரம் விட்டு மறுவாரம் என்ற வகையில் மொத்தம் 90 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.
இதன் மூலம் கோடை காலத்தில், கிராமப்புறங்களில் நிலத்தடி நீா்மட்டம் பாதுகாக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நங்காஞ்சியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளா் பாலமுருகன், கொடகனாறு உதவிப் பொறியாளா்கள் முருகன், மகேஷ்வரன், வட்டாட்சியா் முகமதுசிக்கந்தா், கொடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.