கொடைக்கானலில் கோடை மழை: படகு சவாரி நிறுத்தம்
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடைகால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனா். கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை மிதமான வெயிலடித்து வந்த நிலையில், பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழையால் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இதே போல ஏரியைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் புகா்ப் பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு குறைந்து வருகிறது.
கொடைக்கானல் கிராமப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பி.எல். செட், வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் உருளை, கேரட், பீட்ரூட் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.
தற்போது பெய்து வரும் மழை விவசாயப் பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து குளுமையான சீதோஷ்ண நிலை கொடைக்கானலில் நிலவுகிறது.