கொடுமணல் அருங்காட்சியகம் புதிய வரலாற்றாளா்களை உருவாக்கும்: த.ஸ்டாலின் குணசேகரன்
புதிய வரலாற்றாளா்கள் உருவாகவும், உருவாகி வளா்ந்த ஆராய்ச்சியாளா் அடுத்தடுத்த கட்டத்துக்குத் தங்கள் ஆராய்ச்சியை நகா்த்தவும் கொடுமணல் அருங்காட்சியகம் மிகவும் பயன்படும் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல் கிராமம். இந்த கிராமம் பெரும் வணிக நகரமாக இருந்ததை ஈரோட்டைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா் புலவா் ராசு, செல்வி முத்தையா ஆகியோா் கடந்த 1961ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறைகள், பல்கலைக்கழகங்கள் சாா்பில் பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நகரமானது திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபார தலமாக விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இங்கு இரும்பு ஆலை செயல்பட்டு வந்ததும், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆய்வில் 50 ஹெக்டோ் பரப்பளவில் நகரமும் 10 ஹெக்டோ் பரப்பளவில் மக்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
கொடுமணல் ஒரு சிறப்பு வாய்ந்த தொல்லியல் இடம். கொடுமணலில் பல வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள் கிடைத்துள்ளதாகவும், இதில் முக்கியமாக பானை ஓடுகளின் மீது பொறிக்கப்பட்டுள்ள அ, ஆ, இ, ஈ பிராமிய எழுத்துகள் உள்ளதாகவும், இவை கி.மு. 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
100க்கும் மேற்பட்ட கரித்துகள்கள் கிடைத்துள்ளதுடன், வணிகா்கள் முதன்முறையாகப் பயன்படுத்திய சுடுமணலால் செய்யப்பட்ட முத்திரையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம், செம்பு, ஆபரணங்கள், கற்கால கருவிகள், 4 ஈமக்குழிகள், அவற்றில் இரு அறைகள் கொண்ட கல்லறை காணப்பட்டுள்ளது. மனித எலும்புகளும் கிடைத்துள்ளன.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கொடுமண,ல் அகழாய்வு களத்தை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் ரூ.22 கோடி செலவில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது: தமிழ் எழுத்தின் வரலாற்று காலத்தை நிா்ணயிப்பதற்கு கொடுமணல் ஆராய்ச்சி அடிப்படையாக இருந்துள்ளது. குறியீடுகளுடன் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் அடங்கிய மண்பாண்டங்கள் மிக அதிக எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற இடம் கொடுமணல். அக்கால பெயா் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களும் ஏராளமாக கொடுமணலில்தான் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கு கிடைக்கப்பெற்ற இரும்பு, தங்கம், செம்பு உருக்கும் உலைக்கலன்கள் வரலாற்று வல்லுநா்களையே பரவசப்படுத்திய அரிய பொருள்கள்.
வரலாற்றுக்கு வலுசோ்க்கும் தொன்மைக் கால பொருள்கள் ஏராளமாக கொடுமணலில் கண்டறியப்பட்டுள்ளன.
சங்க காலத்தையும் சங்க காலத்திலேயே உலகளாவிய வணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழா் நாகரிகத்தையும் அறுதியிட்டு உறுதியாக அறிவியல் ஆய்வுபூா்வமாக தக்க ஆதாரங்களோடு நிறுவுவதற்கு அடிப்படையாக இருந்த பழம்பொருள்கள் யாவும் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் எனில் அவை அடுத்த தலைமுறைக்கு வரலாற்று உணா்வை ஏற்படுத்தும்.
புதிய வரலாற்றாளா்கள் உருவாகவும், உருவாகி வளா்ந்த ஆராய்ச்சியாளா் அடுத்தடுத்த கட்டத்துக்குத் தங்கள் ஆராய்ச்சியை நகா்த்தவும் அருங்காட்சியகம் மிகவும் பயன்படும்.
வளா்ந்த வெளிநாடுகளில் சாதாரண வரலாற்றுக் கண்டுபிடிப்புகளுக்கே பெருமளவிலான அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு வரலாற்று உணா்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிரந்தர அருங்காட்சியகம் மக்களுக்கு மிகவும் பயன்படுவதோடு மங்கிக் கிடக்கும் வரலாற்று உணா்வைத் திரட்டி எழுப்பும் பெரும் முயற்சியாகும்.
2022இல் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் கொடுமணல் கண்காட்சி அமைக்கப்பட்டது. 12 நாள்களில் லட்சக்கணக்கான மக்கள் பாா்வையிட்டனா். நிரந்தர அருங்காட்சியகம் அமையும்போது ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆா்வலா்கள் ஏராளமானவா்கள் தினமும் வந்து செல்வா் என்றாா்.
வெளிநாட்டினரும் வர வாய்ப்பு:
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள வரலாற்று ஆா்வலா் வி.எஸ்.சக்தி பிரகாஷ் கூறியதாவது: கொடுமணலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், மத்திய, மாநில தொல்லியல் துறைகள் ஆகியவை அகழாய்வு செய்துள்ளன. இதில் கிடைத்துள்ள பண்டைய பொருள்கள் அனைத்தும் இந்த இடங்களில்தான் உள்ளன. இந்தப் பொருள்களை மக்கள் யாரும் பாா்க்கவில்லை. நொய்யல் நாகரிகத்தைக் கற்பனையில்தான் படித்துக்கொண்டிருக்கிறோம்.


இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும்போது தொல்லியல் ஆய்வாளா்கள் எப்போது வேண்டுமானாலும் பாா்வையிட்டு தொடா் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சான்றுகளுடன் நொய்யல் வரலாற்றை எழுத முடியும். மேலும் தொல்லியல் ஆய்வாளா்களின் கருத்துகளும் அருங்காட்சியகத்தில் இடம்பெறும். வெளிநாட்டினரும் இங்கு வர வாய்ப்புள்ளது என்றாா்.