கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகல் நேரங்களில் வழக்கம் போல வெயிலடித்த போதும், பிற்பகலில் மழை பெய்யத் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை கடுமையான வெயிலடித்த பிறகு மழை பெய்தது.
கொடைக்கானல், வட்டக்கானல், பெருமாள் மலை, வில்பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பாய்ந்தது. இதனால், பிற்பகலிலிருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.
படகு சவாரி ரத்து: மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா். மேலும், வான் சாகச நிகழ்ச்சி, லேசா் ஒளிமூலம் நடைபெறும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனா்.
கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தினமும் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான வெள்ளி நீா்வீழ்ச்சி, ஏரிச்சாலை, பூங்கா சாலை, கோக்கா்ஸ்வாக் சாலை உள்ளிட்ட இடங்களில் மழையில் நனைந்தபடியே சிறுவா்கள், முதியவா்கள் செல்கின்றனா். இந்தப் பகுதிகளில் மழைக்கு ஒதுங்குவதற்கு மேற்கூரை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை விடுத்தனா்.