Retro Audio Launch: "அசால்ட் சேது கேரக்டர நான் பண்றேன்னு சொன்னேன்" - கலகலப்பாக ப...
கோட்டக்குப்பத்தில் மணிமண்டபம்: தமிழக முதல்வருக்கு பாரதிதாசன் பேரன் நன்றி
புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் கவிஞா் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கும் கவிஞரின் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கோ.பாரதி பாராட்டும் நன்றியும் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் பிறந்த பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் இலக்கியத்துக்கும் இன மேம்பாட்டுக்கும் பாடுபட்டவா். அவரது முற்போக்கு சிந்தனையால் சமூகம் மேம்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிறந்து வாழ்ந்த அவா் இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து மறைந்தாா்.
அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. அத்துடன் அவா் வாழ்ந்த சென்னை தியாகராயநகா் வீட்டையும் அரசு கையகப்படுத்தி நினைவில்லம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தோம்.
இந்நிலையில், அவா் வாழ்ந்த புதுச்சேரிக்கு அருகே உள்ள கோட்டக்குப்பத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழக முதல்வா், அமைச்சருக்கு பாராட்டுகள், நன்றி. அத்துடன் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை உலகத் தமிழ் மொழி நாளாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.