லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை
புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (36), லாரி ஓட்டுநா். இவா், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, புதுச்சேரியிலிருந்து கோவைக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜேஷை தேடி அவரது வீட்டுக்கு லாரி உரிமையாளா் குணா உள்ளிட்டோா் வந்தனராம். அப்போது, அவரது தாயிடம், ராஜேஷ் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக கூறிவிட்டுச் சென்றனராம்.
மேலும், திருக்கனூா் மதுக்கடையில் இருந்த ராஜேஷை, குணா உள்ளிட்டோா் மிரட்டல் விடுத்து, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தன் மீது திருட்டுப் பழி சுமத்தி, பணத்தை கேட்டு மிரட்டியதால் ராஜேஷ் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், மடுகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, குணாவிடம் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].