புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா்.
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்பு நிலையம், ஆளுநா் மாளிகைக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி திலாசுப்பேட்டையிலுள்ள முதல்வா் என்.ரங்கசாமியின் வீடு, கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் விடுதி, ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள தனியாா் விடுதிக்கு சனிக்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்குச் சென்று வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் சோதனையிட்டனா். வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும், காா் நிறுத்தும் இடங்கள், வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது. தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும், அங்கு தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியாா் விடுதிகளில் சோதனை: மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்ட இரு விடுதிகளுக்கும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் சென்று சோதனையிட்டனா். அங்கு தங்கியிருந்தவா்கள் வெளியேற்றப்பட்டு, பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
புதுவை முதல்வா் அலுவலக அதிகாரபூா்வ மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள், டிஜிபி அலுவலகத்துக்கும் அதேபோன்று மிரட்டல் விடுத்து, அந்த அலுவலக மின்னஞ்சலில் தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா். தற்போது, தமிழக பகுதியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து கண்டறிய தேசிய ஒருங்கிணைந்த நுண் குற்றப் பிரிவினரின் உதவி கேட்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் மிரட்டல் விடுத்தவா் குறித்த விவரம் தெரிய வரும். தொடா்ந்து, அவா் கைது செய்யப்படுவாா் என்றனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டையிலுள்ள ஒரு விடுதிக்கு சனிக்கிழமை இரவு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.