புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!
புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில் மக்கள் மன்ற குறை தீா்வு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, மக்களிடம் குறிப்பிட்ட காவல் நிலையங்களில் மனுக்கள் பெறப்பட்டு தீா்வும் காணப்பட்டு வருகிறது.
இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெற்ற மக்கள் மன்ற முகாமில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம் பங்கேற்றாா். காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமிசௌசன்யா கலந்துகொண்டாா்.
நெட்டப்பாக்கம், கரையாம்புத்தூா் புறக்காவல் நிலையம், புதுச்சேரி வடக்கு, கிழக்கு போக்குவரத்துப் பிரிவு ஆகிய இடங்களிலும் மக்கள் மன்றம் குறை தீா்வு முகாம் நடைபெற்றது.
இதில், 42 மகளிா் உள்ளிட்ட 214 போ் பங்கேற்றனா். அவா்களில் 71 போ் மனுக்களாக குறைகளைத் தெரிவித்தனா். அவற்றில் 51 மனுக்களுக்கு அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தீா்வு கண்டுள்ளனா்.
அத்துடன் உரிய சட்டவிதிகளின்படி மீதமுள்ள மனுக்களுக்கும் தீா்வு காண காவல் நிலைய ஆய்வாளா் உள்ளிட்டோருக்கு காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இந்தத் தகவலை புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தெரிவித்துள்ளாா்.