'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
நேற்று மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்தார்.
இதற்கு மதிமுகவின் பொது செயலாளர் மல்லை சத்யா உடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று நடந்த மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவிற்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார் துரை வைகோ.
இது இயற்கை தான்
இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, "ஜனநாயக இயக்கங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். சில நேரங்களில், அதன் நிர்வாகிகள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கை தான். இது அனைத்து இயக்கங்களிலும் இருக்கும்.
இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், மனம் விட்டு அனைத்து நிர்வாகிகளும் பேசினார்கள். இறுதியாக இயக்க நலன், இயக்கத்தின் தந்தை நலன் தான் முக்கியம். இயக்கம் கட்டுக்கோப்பாக இருக்கிறது.

அவர் கொடுத்த வாக்குறுதி...
தமிழ்நாட்டின் நலனுக்காக இன்றளவும் போராடி வரும் இயக்கம் மதிமுக. இந்த இயக்கத்தோட பயணம் இன்னும் சீரும், சிறப்புமாக தொடர வேண்டும் என்பதால் நாங்கள் பேசினோம்.
சகோதரர் மல்லை சத்யா மீது நான் முதற்கொண்டு பலர் குற்றசாட்டுகளை முன்வைத்தப்போது, அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இனிமேல், எனக்கும், இயக்கத்திற்கும், இயக்கத்தின் தலைவருக்கும் பக்க பலமாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
நானும்...
அதை ஏற்றுக்கொன்டு என் பதவியில் தான் தொடர்கிறேன் என்று கூறியுள்ளேன். இந்த இயக்கத்திற்காக பாடுபடுபவர்களை தலை மேல் வைத்து கொண்டாட தயார் என்று பல முறை கூறியுள்ளேன்.
சகோதரர் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.
இதுவரை நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனிமேல் நடப்பது நன்மையானதாக இருக்கும் என்பதை இயக்கத் தந்தை கூறியதுப்போல நானும் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.