டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை..! சஹால் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!
கோத்தகிரி: குடிநீர்த் தொட்டிக்குள் தத்தளித்த கரடிகள்; சாதுரியமாக யோசித்து, ஈஸியா மீட்ட வனத்துறை!
நீலகிரியில் வாழிடச் சூழலை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் உணவு தேடிக் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. பொது இடங்களில் கொட்டப்படும் காய்கறி, பழக் கழிவுகளால் ஈர்க்கப்படும் கரடிகள், குப்பைகளை உணவாக உட்கொள்ளும் அவலமும் வழக்கமான ஒன்றாகவே மாறி வருகிறது.
இது போன்று ஊருக்குள் நுழையும் கரடிகளால் மனித எதிர்கொள்ளல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள தும்பூர் பகுதியில் உள்ள ஊராட்சி குடிநீர்த் தொட்டிக்குள் இன்று (ஜனவரி 18) காலை பயங்கர உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது.
இதைக் கேட்டுப் பதறிய மக்கள், தொட்டிக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். உள்ளே இரண்டு கரடிகள் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதை அறிந்தனர். உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற வனத்துறையினர், கரடிகள் உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
சமயோசிதமாக யோசித்து, தொட்டிக்குள் ஏணிகளை வைத்து விட்டு சற்று தொலைவில் நின்று கண்காணித்து வந்துள்ளனர். சிறிது நேரத்திலேயே ஏணி மூலம் இரண்டு கரடிகளும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொட்டியிலிருந்து வெளியேறிக் காட்டுப் பக்கம் சென்று மறைந்துள்ளன. திறந்தவெளி கிணறுகள் மற்றும் குடிநீர்த் தொட்டிகளைப் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.