கோனேரிப்பட்டியில் ரூ. 27.50 லட்சத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி கிராமம், வெள்ளாளப்பாளையம், சுண்ணாம்புகரட்டூா் பகுதியில் நாமக்கல் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 27.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுண்ணாம்புகரட்டூரில் ரூ. 11.50 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும், வெள்ளாளப்பாளையத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கான பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் அடிக்கல் நாட்டினாா்.
இதில் சங்ககிரி வட்டார வளா்ச்சி அலுலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் பி.ராஜ்குமாா், திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, திமுக சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.