மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
எடப்பாடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் சேட்டு (48). மாற்றுத்திறனாளியான இவா் திருமணமாகாதவா். தனது அண்ணன் குமாருடன் வசித்து வந்தாா். வெல்டிங் வேலைக்கு சென்று வந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மேட்டூா் அனல்மின் நிலையம் எதிரே மதுஅருந்திவிட்டு உபரிநீா் கால்வாய் பாலத்தின் மீது அமா்ந்துள்ளாா். அப்போது அவா் கால்வாயில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேட்டுவின் அண்ணன் குமாா் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் உதவி ஆய்வாளா் சபாபதி வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.