பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
கோலிவுட் ஸ்டூடியோ!
ஆஸ்கர் குறித்து கங்கனா!
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ஜனவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'எமர்ஜென்சி'. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவானது.
இப்படத்தில் கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார். அவரே இத்திரைப்படத்தை இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் பெரிய பின்னடைவைச் சந்தித்தது.
சமீபத்தில் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பின் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. திரைப்படம் வெளியானதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் 'எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கருக்கு இந்தியா சார்பாக செல்ல வேண்டும்' என்றார்.
அதற்கு பதிலளித்த அவர்,' ஆனால் அமெரிக்கா வளரும் நாடுகளை எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள், அடக்குகிறார்கள் மற்றும் ஆயுதங்களைத் திருப்புகிறார்கள் என அதன் உண்மையான முகத்தை ஒப்புக்கொள்ள விரும்பாது. இது எமர்ஜென்சியில் அம்பலப்படுத்தப்
பட்டுள்ளது. அவர்களின் வேடிக்கையான ஆஸ்கார் விருதை அவர்களே வைத்திருக்கட்டும். நம்மிடம் தேசிய விருதுகள் உள்ளன.' எனக் கூறினார்.
நட்பு குறித்து மோகன்லால்!
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் 'எல்2: எம்புரான்' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக 'எல்2:எம்புரான்' படக்குழுவினர் அனைவரும் பல்வேறு நகரங்களுக்கும் பம்பரமாய் சுற்றி வருகிறார்கள்.
சென்னையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய மோகன்லால், 'முதல்ல இந்தப் படத்தை ட்ரையாலாஜியாகதான் பண்ணணும்னு திட்டமிட்டோம். இந்த படம் நம்ம சினிமா துறைக்கானது. எல்2: எம்புரான் வித்தியாசமான படம். இந்தப் படம் எங்களின் ரத்தமும் வியர்வையும் நிறைந்தது.
முக்கியமாக ஒரு பெரிய ஒத்துழைப்பு இந்தப் படத்துக்குக் கிடைச்சுருக்கு. மக்கள் இந்தப் படம் பார்க்க விரும்புறதுக்குக் காரணம் முதல் பாகம்தான்.இந்தப் படம் வெற்றி அடைந்தால்தான் இந்த மாதிரியான அடுத்த படங்கள் எடுக்க முடியும். சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னுனா பெரிய படங்களும் சின்ன படங்களும் ஓடணும்' என்றவரிடம் தொகுப்பாளர்கள், 'எப்படி 40 வருடங்களில் 400 படங்கள் வரை நடிக்க முடிந்தது?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ' 40 கிடையாது. மொத்தமாக 47 வருடங்கள். அந்த 7 வருடங்கள் மிகவும் முக்கியமானது. 400 படம் நடிச்சது எனக்கு ஆசிர்வாதம். நல்ல ஆடியின்ஸ் கிடைச்சிருக்காங்க' என்றார்.
சமீபத்தில் சபரிமலையில் தனது நண்பரான நடிகர் மம்மூட்டி உடல் நலம்பெற வேண்டி பூஜை செய்திருந்தார்.அது குறித்துப் பேசும்போது, 'அந்த ஆழமான நட்பு பற்றி ஏன் சொல்லணும். சபரிமலைக்குப் போய் அவருக்காக வேண்டினேன். உங்களுக்காகவும் நான் வேண்டுவேன். என்னுடைய நண்பர் அவர், என்னோட சகோதரர் அவர். அதனால். அவர் நலமுடன் இருக்கிறார். எல்லோருக்கும் இருக்கிற மாதிரி சின்ன பிரச்னை அவருக்கு அவ்வளவுதான்' என்றார் நெகிழ்ச்சியாக.
மாளவிகாவின் நெகிழ்ச்சி!
புகைப்படங்களை பிலிம் ரோலில் எடுப்பது எப்போதும் சிலருக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். அப்படியான புகைப்படங்களை பொக்கிஷங்களாகப் பலரும் பாதுகாப்பார்கள். டிஜிட்டல் உள்ளங்கையில் அனைத்தையும் கொண்டு வந்தாலும் இந்த பிலிம் புகைப்படங்கள் பலருடைய மனதில் நீக்கமற இடத்தைப் பிடித்திருக்கும்.
அப்படி நடிகை மாளவிகா மோகனன் தன் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அப்பா அவருடைய சிறு வயதில் எடுத்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பதிவில் மாளவிகா மோகனன், 'முன்பெல்லாம் என் அப்பா என்னையும் என்னுடைய அம்மாவையும் வைத்து அழகான புகைப்படங்களை எடுப்பார். அதில் பெரும்பாலான புகைப்படங்கள் திரைப்படங்களின் ஃப்ரேம் போலவே இருக்கும்.
என்னுடைய இளமை காலத்தில் இந்தப் புகைப்படங்கள் எவ்வளவு அரிதானது, எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அப்போது நான் உணரவில்லை. ஏனென்றால், இந்தப் புகைப்படங்களை சுற்றிதான் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு குடும்பங்களும் இப்படியான புகைப்படங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இப்போது எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிவிட்டது. என் அப்பாவும் இப்போது எங்களைப் புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டார். என் அப்பா இப்படியான பிலிம் புகைப்படங்களை மிஸ் செய்திருக்கலாம்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.