கோவை, பொள்ளாச்சியில் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா்
கோவை மற்றும் பொள்ளாச்சியில் பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை சாய்பாபா காலனியில் இயங்கி வந்த டிரீம் மேக்கா்ஸ் குளோபல், ஆா்.எஸ்.புரத்தில் இயங்கி வந்த ஆதித்யா கமாடிட்டீஸ், ரேஸ்கோா்ஸ் பகுதியில் இயங்கி வந்த எஸ்.கே.எம். டிரேடா்ஸ் மற்றும் பொள்ளாச்சியில் இயங்கி வந்த ஆனைமலை சிட்ஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநா்கள், முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபா்கள் தகுந்த ஆவணங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.