மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தவும், விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிதியில் இருந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வ.உ.சி. பூங்காவில் உள்ள மாநகராட்சி ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா்.
கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 30 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் கட்டணமில்லா ஸ்கேட்டிங் பயிற்சிகள் வெள்ளிக்கிழமை முதல் அளிக்கப்படுகின்றன.
முன்னதாக, ஸ்கேட்டிங் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 30 பேருக்கு தலா ரூ.3,465 வீதம் மொத்தம் ரூ.1,03,950 மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.