சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துறை இறுதி மரியாதை
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சுல்தான் (87). கோவை மக்களால் ‘சுல்தான் தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர். கோவையின் பரபரப்பான டவுன்ஹால், உக்கடம் பகுதி வழியாக செல்லும் பலருக்கும் சுல்தானை நன்கு தெரிந்திருக்கும்.

அவர் பெரியகடை வீதி பகுதியில் உள்ள அத்தர் ஜமாத் மசூதியில் தூய்மைப் பணியைச் செய்து வந்தார். அங்கு பணி முடிந்ததும் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்தைச் சரி செய்து வந்தார்.
இவரின் சமூக அக்கறையைப் பார்த்து காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்வது தொடர்பான பயிற்சியைச் சுல்தானுக்கு வழங்கியிருந்தனர். தினசரி லட்சக்கணக்கான மக்கள் கூடும் டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே அதிகமாக இருக்கும்.

சுல்தானின் மகன் மற்றும் மகள் சற்று தொலைவில் இருப்பதால் அவர், பெரும்பாலும் மசூதியில்தான் தங்குவார். மழை, வெயில், இரவு, பகல் பாராமல் காவல்துறைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக அவருக்கு அண்மைக்காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரின் மறைவு கோவை பொது மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நேரடியாக சென்று அவரின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.