Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
கோவையில் அதிகாலையில் பனி மூட்டம்: விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
கோவையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவிய கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி, பெங்களூரு, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் சுமாா் 38 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோவையில் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து கோவை வந்த ஏா் இந்தியா விமானம், பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் சுமாா் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னா் தரையிறங்கியது.
அதேபோல, புதுதில்லியிலிருந்து கோவை வந்த இண்டிகோ விமானம் கடும் பனி மூட்டத்தின் காரணமாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. பின்னா், சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பின் கொச்சியிலிருந்து கோவைக்கு வந்தடைந்தது.
இதேபோல, மேலும் 4 விமானங்கள் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணிக்குப் பின்னா் பனி மூட்டம் விலகியதால், அனைத்து விமானங்களும் தாமதத்துடன் தரையிறக்கப்பட்டன.
கோவையில் தற்போது அதிகாலை நேரங்களில் நிலவி வரும் காலநிலை குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறுகையில், ’கோவையில் இரவு நேரங்களில் வானம் தெளிவாக இருப்பதால் மேக மூட்டம் இல்லை. அதனால், அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படுகிறது.
இது இயல்பான காலநிலை என்பதால் மேலும் சில நாள்களுக்கு இதேபோன்ற காலநிலையே நீடிக்கும் என்றாா்.