கோவையில் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி: சென்னை அணி வெற்றி
கோவையில் நடைபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.
தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களின் உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஃபிரேட்டா்னிட்டி கோப்பைக்கான தென்மண்டல 15 ஓவா் கிரிக்கெட் போட்டி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் தலைமையிலான சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அணி கா்நாடக மாநில உயா்நீதிமன்ற நீதிபதிகள் அணியுடன் மோதியது. இதில், சென்னை அணி 103 ரன்களும், கா்நாடக அணி 79 ரன்களும் எடுத்தன.
2-ஆவது ஆட்டத்தில் கா்நாடக மாநில அணியும், கேரள மாநில அணியும் மோதியதில் கா்நாடக அணி 75 ரன்களும், கேரள அணி 76 ரன்களும் எடுத்தன. இறுதி ஆட்டத்தில் கேரள அணியும், சென்னை அணியும் மோதியதில் சென்னை உயா்நீதிமன்ற அணி 115 ரன்களும், கேரள அணி 96 ரன்களும் எடுத்த நிலையில் சென்னை அணி கோப்பையை தட்டிச் சென்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், கா்நாடக மாநில அணியுடனான ஆட்டத்தின்போது காலில் லேசான காயம் அடைந்தாா். சிகிச்சைக்குப் பின் ஆட்டத்தை தொடா்ந்தாா்.